முன்பின் தெரியாமலே
முகத்தில் பூத்த புன்னகை
வழியாக அறிமுகமாகி ,
" எங்கப்பா புல்லட்
வெச்சிருக்காரு தெரியுமா..?"
"ஹூம் , எங்கப்பா
புல்லட் கடையே
வெச்சிருக்காரு தெரியுமா ..?"
என்று அப்பா ஜம்பம் அடித்து
பேசத் தொடங்கி ,
பக்கத்து வீட்டு ஜன்னலை
புதுப்பந்தால் பதம் பார்த்து ,
"நான் இல்லே , இவன் தான் " என
சிலமுறை தனக்காக உண்மையும் ,
"இவன் இல்ல , நான் தான் " என
சிலமுறை நண்பனுக்காக பொய்யும் சொல்லி ,
ஒன்றாக வசவு வாங்கி ,
ஒன்றாக மறந்து ,
மீண்டும் இன்னொரு வீட்டு
ஜன்னலை குறிவைக்காமலேயே
உடைத்து ,
எதிர் வீட்டு மாமரத்தில் பறித்த
திருட்டுமாங்காயில் உப்பு சேர்த்து
"உச்சு " கொட்டி சாப்பிட்டு,
தெருமுனை டீக்கடையில்
எந்த சந்தோஷத்தையும்
1 /2 ஆக்கி ருசித்து ,
ஒரே காலேஜில் சீட் வாங்கி ,
ஒன்றாக ஊர் சுற்றி ,
பிரின்சிபால் பெண்ணை
பார்க்கும்போதெல்லாம்,
"டேய் , நம்ம பிரின்சிபால் மாமா
ரொம்ப நல்லவருடா , இல்ல "
என்று அவள் கேட்கும் படியே
கமெண்ட் அடித்து ,
ஒன்றாக அரியர்ஸ் வைத்து ,
ஒன்றாக அடுத்த அட்டெம்ப்டில் பாசாகி ,
காலை , மாலை என
ஷிப்டு போட்டு வேலை தேடி ,
கிடைத்த வேலைக்காக
வெவ்வேறு ஊர்களுக்கு சென்று ,
வருடங்கள் கடந்து,
பத்தாம்கிளாசில் படித்த
முருகன் கல்யாணத்திலோ ,
காலேஜ் சீனியர்
அம்மா மரணத்திலோ
மீண்டும் பார்த்து ,
சடங்குகள் எல்லாம் முடித்த பின்னர் ,
நொடிகள், நிமிடங்கள் , மணிகள்
எல்லாம் மறந்து ,
பழைய கதை பேசி ,
பிரியும் நேரம் மனதிற்குள்ளேயே
அழுகாச்சி காவியம் வடித்து ,
வீடு திரும்பிய பின்னர் ,
கண்களின் ஓரம்
லேசாக சிந்தும்
அந்த தூறல் தான் ,
" நட்பு "
No comments:
Post a Comment