Monday, April 18, 2011

பிரிந்த தோழிக்காக ...

அருகில் நீ இருந்த 
நொடிகளில் உணரவில்லை,
உன் நட்பு 
ஒரு வைரக்கல் என்று ...!!
 
வெறும் கண்ணாடிக்கல்லாக 
பார்த்த பாவத்தினால் தானோ,
இன்று என் மனது 
கல்லடி பட்ட கண்ணாடியாக 
சிதறிக் கிடக்கின்றது ...?!
 
ஆனால் ஒரு உண்மை...
 
எதிரில் நீ இல்லாவிட்டாலும்,
சிதறிக் கிடக்கின்ற
இந்த கண்ணாடித் துண்டுகள்
ஒவ்வொன்றிலும்
உனது நினைவுகள் தான்
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன ...
 
                                                      இப்படிக்கு,
                                        வைரத்தை தொலைத்த
                                    அதிர்ஷ்டமில்லாத என் நட்பு...

Thursday, March 10, 2011

பிரிவு...

உடலில் மட்டும்
உயிர்ப்பு தந்து ,
உயிரைக் கொலைசெய்யும்
நினைவு ...

கடலில் உள்ள
நீர்த்துளிகளின்
எண்ணிக்கையை விட
மனதில் சுரக்கும்
கண்ணீர்த்துளிகளை
அதிகரிக்கச் செய்யும்
உணர்வு...

நிகழ்காலத்திலும்
இறந்தகாலத்தோடு
இணைந்து வாழும்
துயரமான கனவு...

Tuesday, March 8, 2011

பெண்

கருவறையிலிருந்து
கல்லறை வரையிலான
ஆணின் பயணத்திற்கு,
கடவுள் தந்த
வழித்துணை...

Tuesday, November 23, 2010

என் வாழ்க்கை ..

துளசிச் செடியின் புனிதமாக
அம்மாவின் அன்பு ,

வெயில்கால குடையாக
அப்பாவின் அக்கறை ,

பாடப்புத்தகத்தின் நடுவில்
காமிக்ஸ் புத்தகமாக இனிக்கும்
தங்கையின் சீண்டல் ,

மாண்டு போனாலும்
மீண்டு வந்து பேசும் வரை
இடைவிடாத நண்பனின் தொடர்பு ,

தினசரி தோன்றும்
சிறு சிறு கஷ்டங்களுக்கு நடுவில்,
இவை யாவும் ஒருசேர
அனுபவிக்கும் சொர்க்கம் தான்
"என் வாழ்க்கை .."

Tuesday, July 6, 2010

இரவு உலகம் ..

தொலைந்து கொண்டிருக்கும்
வெளிச்சக் கதிர்களுடன்
மற்ற நினைவுகளையும்
தொலைத்துக் கொண்டிருக்கின்றேன் ,

உனது நினைவுகளை மட்டும்
ஜனிக்கப் போகும்
இன்றைய இரவு உலகத்திற்குள்
எடுத்துச் செல்ல ..

இருள் சூழ்ந்த இரவும்
இதமாக மனதிற்குள்
படர ஆரம்பித்தது ,
உன்னைக் கண்ட நாள் முதலாய்த் தான்..

எண்ணற்ற நிஜங்களின் வலிகளை
உன் கனவென்னும் களிம்பு தான்
தினமும் குறைக்கிறது ..

மழலையின் மொழி போல
இனிமையும் ,
குழலின் இசை போல
இதமும் ,
மார்கழி மாத
அதிகாலை பக்தி போல
புனிதமும்
ஒன்றாய் உணர்வது
உனக்காக கனவு காணும்
இந்த இரவு உலகில் தான் ..

மெல்ல கண்கள் மூடி ,
என் உணர்வுகளின் கதவைத்
திறக்கிறேன் ,
கதவிற்கு அப்பால்
உனக்கு மட்டுமே அனுமதி ,
நமக்காக கற்பனை செய்த
அந்த சொர்க்க உலகிற்குள் செல்ல ..

Wednesday, June 30, 2010

பிடித்த பயணங்கள் முடிவதில்லை ...

வரவேற்க வேண்டிய பெண் கவிஞர்களின் கவிதை பற்றி எனது ஆதரவு .

ஒரு பெண் தான் பெற்ற எதிர்ப்புக்கு மறுமொழி தருவதாக உருவகம் செய்துள்ளேன் ..

நான் செல்வதெல்லாம்
இந்தப் புதிய பாதையில்
ஏற்கனவே பதிந்த
பாதச் சுவடுகளை
பின்தொடர்ந்து தான் ..

எனக்குப் பாதையின்
பாதுகாப்பு பற்றியோ ,
பாதையின் எல்லை பற்றியோ
எதுவும் தெரியாது ..

ஆனாலும்
எனக்குப் பிடித்துப் போனதால்
மகிழ்வுடன் பயணிக்கிறேன் ..

அதை "கூடாது" என்று
நீ எப்படி தடுக்கலாம் ..??

ஒருவேளை ,
பிடித்த பாதையில் செல்லும்
எனது உரிமை போல் ,
பிடிக்காததை சொல்லி கத்துவது
உனது உரிமை எனில் ,
கத்தி கொண்டே இரு ..

என்ன ...,
இன்னும் சிறிது தூரம் தான் ..

உன் கண்களுக்கு நானும் ,
என் காதுகளுக்கு நீயும்
எட்டாத அந்த தூரத்தை
தொட்ட பின் ,
மீண்டும் பயணிப்பேன் நான் ,
எனக்கு விருப்பமான இந்த பாதையில் அதே மகிழ்வுடன் ...

மீண்டும் வேறொருவர்
எதிர்த்து குரல் தரும்பொழுது ,
எனக்கு அது பழகிப் போயிருக்கும் உன்னால் ,
அதனுடன் சேர்ந்து எனக்குப் பிடித்த இந்த பாதையும் ..

Wednesday, April 21, 2010

டீன் ஏஜ் கடிதங்கள் 4 ..

யாரும் இல்லாத
பாதையில்
புதிதாகச் செல்லும்
பயணியின் தவிப்புதான்
எஞ்சியிருக்கும் எனக்குள் ,

நீ எதிர்வர
நான் நடக்கும்பொழுது
எனைத் தீண்டும்
உன் பார்வையை
ஏற்கும் வரை ..