தொலைந்து கொண்டிருக்கும்
வெளிச்சக் கதிர்களுடன்
மற்ற நினைவுகளையும்
தொலைத்துக் கொண்டிருக்கின்றேன் ,
உனது நினைவுகளை மட்டும்
ஜனிக்கப் போகும்
இன்றைய இரவு உலகத்திற்குள்
எடுத்துச் செல்ல ..
இருள் சூழ்ந்த இரவும்
இதமாக மனதிற்குள்
படர ஆரம்பித்தது ,
உன்னைக் கண்ட நாள் முதலாய்த் தான்..
எண்ணற்ற நிஜங்களின் வலிகளை
உன் கனவென்னும் களிம்பு தான்
தினமும் குறைக்கிறது ..
மழலையின் மொழி போல
இனிமையும் ,
குழலின் இசை போல
இதமும் ,
மார்கழி மாத
அதிகாலை பக்தி போல
புனிதமும்
ஒன்றாய் உணர்வது
உனக்காக கனவு காணும்
இந்த இரவு உலகில் தான் ..
மெல்ல கண்கள் மூடி ,
என் உணர்வுகளின் கதவைத்
திறக்கிறேன் ,
கதவிற்கு அப்பால்
உனக்கு மட்டுமே அனுமதி ,
நமக்காக கற்பனை செய்த
அந்த சொர்க்க உலகிற்குள் செல்ல ..