Wednesday, June 30, 2010

பிடித்த பயணங்கள் முடிவதில்லை ...

வரவேற்க வேண்டிய பெண் கவிஞர்களின் கவிதை பற்றி எனது ஆதரவு .

ஒரு பெண் தான் பெற்ற எதிர்ப்புக்கு மறுமொழி தருவதாக உருவகம் செய்துள்ளேன் ..

நான் செல்வதெல்லாம்
இந்தப் புதிய பாதையில்
ஏற்கனவே பதிந்த
பாதச் சுவடுகளை
பின்தொடர்ந்து தான் ..

எனக்குப் பாதையின்
பாதுகாப்பு பற்றியோ ,
பாதையின் எல்லை பற்றியோ
எதுவும் தெரியாது ..

ஆனாலும்
எனக்குப் பிடித்துப் போனதால்
மகிழ்வுடன் பயணிக்கிறேன் ..

அதை "கூடாது" என்று
நீ எப்படி தடுக்கலாம் ..??

ஒருவேளை ,
பிடித்த பாதையில் செல்லும்
எனது உரிமை போல் ,
பிடிக்காததை சொல்லி கத்துவது
உனது உரிமை எனில் ,
கத்தி கொண்டே இரு ..

என்ன ...,
இன்னும் சிறிது தூரம் தான் ..

உன் கண்களுக்கு நானும் ,
என் காதுகளுக்கு நீயும்
எட்டாத அந்த தூரத்தை
தொட்ட பின் ,
மீண்டும் பயணிப்பேன் நான் ,
எனக்கு விருப்பமான இந்த பாதையில் அதே மகிழ்வுடன் ...

மீண்டும் வேறொருவர்
எதிர்த்து குரல் தரும்பொழுது ,
எனக்கு அது பழகிப் போயிருக்கும் உன்னால் ,
அதனுடன் சேர்ந்து எனக்குப் பிடித்த இந்த பாதையும் ..